×

மனவெளிப் பயணம்.. சிங்கப் பெண்ணே நடையிடு!

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

இப்பவெல்லாம் மார்ச் மாதம் என்றாலே மனதுக்குள் இயல்பாகவே பெண்களுக்கான மாதம் என்றே மனதில் பதிய ஆரம்பித்துவிட்டது. உண்மையில் ஒரு பெண்ணாக என்னவெல்லாம் செய்கிறோம், செய்து கொண்டிருக்கிறோம் என்று சுயமாக திரும்பிப் பார்க்கும்போது, பல விஷயங்களை நாம்தான் செய்திருக்கிறோமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அதனால் தான் இந்தக் கட்டுரையில் ஒரு பெண்ணாக, வியந்து பார்த்த, படித்த ஒரு சிலரைப் பற்றி எழுதலாம் என்று தோன்றியது.

இங்கு வேலை செய்ய பல்லாயிரக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள் என்றும், ஆனால் தலைமைப் பண்பில் பெண்கள் இன்னும் விரல்விட்டு எண்ணுமளவில்தான் இருக்கிறார்கள் என்றும் நாம் பார்க்கும் சமூகத்தில் சாட்சியாக பெண்களே இருக்கிறோம். அது தான் வேதனையான விஷயமாக இருக்கிறது. இதனை மாற்றுவதற்கு, பெண்கள் அனைத்து இடங்களிலும் அவர்களுக்கான சப்போர்டிங் சிஸ்டமை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே வர வேண்டும் என்று எனக்குத் தெரிந்த பலரும் ஒரு சேர வார்த்தைகளால் சொல்லாமல், இயக்கமாக செயல்படுகிறார்கள்.

ஒரு பெண் ஆளுமையாக செயல்பட முடியாது என்று படித்தவர்கள் முதல் வசதியானவர்கள் வரை கூறும் அடிப்படையான, பொதுவான கருத்து என்னவென்றால், திருமணம், குழந்தை என்றான பின், கவனம் செலுத்த நேரமில்லை என்று சாக்குப் போக்கு சொல்வது தான். உண்மையில் யாருடைய உதவியும் கிடைக்கவில்லை என்பவர்களை எதுவும் சொல்ல முடியாது. ஆனால் குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு, படிப்பு, வசதி என்று அனைத்தும் இருக்கும் போது, சக பெண்களை தலைமைப் பண்புக்கு வாங்க என்றுதான் பல பெண் தொழில் முனைவோர்கள் அழைக்கிறார்கள். அப்படி ஒரு சிறந்த ஆளுமையைச் சந்தித்தேன்.

வேறொரு மாநிலத்தில் ஒரு சிறந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் அந்தப் பெண் இயக்குனர், நம் தமிழ்நாட்டில் இருந்து தொடர்ச்சியாக சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும் பெண்களை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தினார்கள். 2017ம் ஆண்டு முதல் முதலாக உளவியல் ரீதியாக பல ஊர்களுக்கு விழிப்புணர்வு தொடர்ந்து செய்கிறேன் என்று சிறந்த பெண்ணுக்கான விருது அவர்களால் எனக்கு வழங்கப்பட்டது. அவர் தொகுத்து வழங்கிய விதம், நிகழ்வை ஒருங்கிணைத்த விதம் எல்லாம் ஆளுமைக்கான அத்தனை பண்புகளும் தெளிவாக இருந்தது. ஆனால் கிளம்பும்போது, பலரும் அவரிடம் பேச விருப்பப்பட்டு வந்தனர்.

அப்போது மைக் வாங்கி, அவர் சொன்ன சொல்லைத்தான் முக்கியமாக பார்க்கிறேன். அவருக்கு சில மாதங்களுக்கு முன்தான், குழந்தை பிறந்தது என்றும், அக்குழந்தைக்கு சீக்கிரம் போய் பால் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதை ஓப்பன் மைக்கில் சொல்லிவிட்டு, குழந்தையைப் பார்க்க போய் விட்டார்.

இங்கு சில பெண்கள் திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்பிற்கு பின்னால், பல விஷயங்களைச் செய்ய முடியாமல் போகிறது என்று கூறும்போது சில கேள்விகளைத்தான் முன் வைக்க வேண்டியதாக இருக்கிறது. உங்களுக்கான வாய்ப்பும், குடும்பத்தின் ஒத்துழைப்பும் கிடைத்தால் போதும், ஒரு பெண்ணாக குடும்பம், குழந்தை, நிறுவனம் என்று மிகச் சிறந்த ஆளுமையாக இருக்க முடியும் என்று அந்தப் பெண் இயக்குனரின் நடவடிக்கையில் வெளிப்படுத்தினார்.

அடுத்ததாக பெண்கள் பலரும் எதற்காக படித்தோம், வேலைக்கு வந்தோம் என்பதை மறந்து விடுகிறார்கள். பெற்றோரிடம் சண்டை போட்டு, தனக்குப் பிடித்த பள்ளி, கல்லூரி என்று தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். திருமணம், குழந்தை என்றான பின் அவர்களது துறையில் சரியாக வேலை செய்து கொண்டிருக்கும் போதே மனதுக்குள் புலம்ப ஆரம்பிப்பார்கள். உண்மையில் இங்கு ஒரு பெண் வேலைக்குச் செல்வது என்பது, பொருளாதார ரீதியாகவும், ஒரு நல்ல பதவியில் இருக்க வேண்டுமென்றுதான் அவரவர் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்றும், அதனால் மிகுந்த குற்றஉணர்வுக்கு ஆளாகிறேன் என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களின் பெற்றோரும் தன்னுடைய பெண்ணின் விருப்பத்திருக்கேற்றவாறு படிக்க வைத்ததன் மூலாதாரத்தை மறந்து விடுகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் ஆண்/பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழல் மிக இயல்பானதாக மாறி விட்டது. ஆனால் 70களில் பேசும் பெண்களைப் போல், புதிதாக பெண்கள் வேலைக்கு வருவது போல் அவர்கள் பேசுவதைக் கேட்கும் போதுதான், மிகவும் வருத்தமாக இருக்கும். 1910இல் சோசலிஸ்ட் பெண்கள் அமைப்பு, வேலைக்குச் செல்லும் பெண்களின் சமூகப்பிரச்னைகள் சார்ந்து இணைந்து அனைவரும் பேச வேண்டுமென்றுதான் மகளிர் தினத்தை உருவாக்கினார்கள்.

இன்றைய வளர்ச்சிக்குப் பெண்களின் அடுத்தக்கட்ட பிரச்னைகளை சார்ந்து நாம் பேச ஆரம்பித்து இருக்க வேண்டும். ஆனால் இன்றும் பெண்கள் குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வில் இருந்து மீட்டெடுப்பது என்பதுதான் பெரிய சவாலாக இருக்கிறது. தன் வீட்டுக் குழந்தை சரியாகப் படிக்கவில்லையா, தான் வேலைக்குப் போவதால்தான் இப்படி நடக்கிறது என்பார்கள். கணவன் கடன் வாங்குகிறார் என்றாலோ அல்லது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாலோ, தான் வேலைக்குச் சென்றதால்தான் இப்படி நடந்துள்ளது என்பார்கள். தான் செய்யாத ஒரு தவறுக்கு குடும்ப அமைப்பை வைத்து, குடும்ப நபர்களின் குற்றங்களுக்காக, தாங்களாக வந்து தண்டித்து விடுங்கள் என்று நிற்பார்கள்.

அதனால்தான் அத்தனை திறமைகள் இருந்தும், மனதளவில் ஒரு குடும்பத் தலைவியாக அத்தனை குடும்பப் பிரச்னைகளுக்கும், அனைத்திற்கும் தான் மட்டுமே காரணம் என்றே கூறும் பெண்களுக்குதான் இன்னும் விழிப்புணர்வு அதிகமாகத் தேவைப்படும் என்றே நினைக்கிறேன். இவர்களின் மனநல ஆரோக்கியம்தான் முக்கியம் என்று தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகிறேன்.அடுத்ததாக வாசிக்கவும், எழுதவும் வேண்டுமென்று அரசாங்கமே ஒவ்வொரு ஆற்றங்கரை நகரமாக இலக்கியத் திருவிழா நடத்துகிறார்கள். உண்மையில் பெண்கள் எழுத்துத் துறைக்கு வரும் போது என்ன மாதிரியான மாற்றங்கள் வந்துள்ளது என்று சொல்கிறேன்.

எப்பொழுதுமே சேனல்களில் வரும் சீரியல்கள் பற்றி பலரும் திட்டுவதை தொடர்ந்து பார்க்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்த பெண் திரைக்கதை ஆசிரியர்கள் அவர்களின் அனுபவத்தைக் கூறும் போது உண்மையாகவே வியக்கிறேன். இந்தியா மாதிரி கலாச்சார பண்பாட்டில் நம்பிக்கையுடன் வாழும் நாட்டில் ஒட்டு மொத்த பெண்களுக்கு எதிரான மாற்றங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. அதனால் பெண்கள் சீரியல்களில் திரைக்கதையாசிரியராக இருக்கும் போது, இரட்டை அர்த்த வசனங்களை நீக்கி விடுகிறார்கள்.

பாலியல் வன்புணர்வு சார்ந்த சீன்களை எத்தனை தூரம் வர விடமுடியாத அளவிற்கு செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள். பெண்களுக்கான மறுமணம் பற்றிய சீன் வைக்கும் போது, அதற்கான குடும்ப ரசிகர்களே அந்த சீனை வரவேற்கும் விதமாக திரைக்கதை அமைக்கிறார்கள். இப்படி ஒரு பெண் எழுத்துத் துறைக்கு வரும் போதும், திரைக்கதையாசிரியராக மாறும் போதும் அவர்களால் முடிகின்ற சின்னச் சின்ன மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இம்மாதிரியான மாற்றங்களினால் தான், சில நேரங்களில் லைம் லைட் வெளிச்சத்தில் வேலைப் பார்க்கும் பெண்களின் அசாதாரணமான எழுத்தும், பேச்சும் திறமையான பெண் ஆளுமைகளை உருவாக்கி விடுகிறது. உதாரணத்திற்கு இன்றைக்கு டேட்டிங் ஆப் என்று சொல்லப்படும் டிண்டர் ஆப்பில் தலைமைப் பொறுப்பில் இருந்த விட்னி வுல்ப் ஹெர்ட் என்பவர், ஒரு சிறு பிரச்னையால் அந்த நிறுவனத்தை விட்டு விலகினார். அதன் பின், அவரும் பெண் என்பதால், அவரின் திறமையை வைத்து பெண்களுக்கான டேட்டிங் ஆப் செயலியை பம்பிள் என்ற பெயருடன் உருவாக்கினார். இன்று பெண்களுக்கான சிறந்த டேட்டிங் ஆப் என்று கருதப்படுகிறது.

இதில் பெண்களுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்ப முடியாது, கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த முடியாது. பெண்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விஷயங்களை டிஜிட்டலில் வசதி மூலம், தேவையற்ற தகவல்களை பிளர் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்பவும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மக்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. ஆனால் எது வேண்டும், எது வேண்டாம் என்ற கண்ட்ரோல் பட்டனை பெண்களிடம் கொடுத்தால் போதும், அதை வைத்து அவர்களின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்து கொள்வார்கள். இதைத்தான் விட்னி வுல்ப் ஹெர்ட் டேட்டிங் ஆப்பில் செய்துள்ளார்.

இப்படி நம்முடைய நவீன காலக்கட்டத்திற்கு ஏற்ப பல மாற்றங்களைச் செய்ய நம் கைக்குள் இருக்கும் மொபைல் மூலம் அத்தனை வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதனால் உண்மையாகவே ரொம்ப கஷ்டப்பட்டு நம் முன்னோர்கள் பலரும் போராடி பெண்களுக்காக பல விஷயங்களை செய்திருக்கிறார்கள். அதனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு போக வேண்டிய கடமை நம்மிடம் நிறைய இருக்கிறது.

இன்றும், அதாவது 2024 இல் முதல் பெண் சாதனையாளர் என்ற அடைமொழிக்குள் தான் இருக்கின்றோம். அதனால் பெண்ணுக்குப் பெண் எதிரி என்ற கருத்தை சொல்லாமல், அதனைப் பொய்யாக்கும் விதமாக பெண்களுக்கான சப்போர்ட்டிங் சிஸ்டமை பெண்களே உருவாக்குகிறார்கள். அதனை ஏற்றுக் கொண்டு, எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், உங்களுக்கான திறமையுடன், தலைமைத்துவ பண்பையும் வளர்த்துக் கொண்டு, அதற்கான வாய்ப்பு அமையும் போது, சமூகத்தில் உங்கள் எண்ணங்களை செயல்படுத்தத் தொடங்குங்கள். அதுவே மகளிர் தினத்திற்காக நாம் செய்யும் கடமையாகும் என்றே நினைக்கின்றேன்.

The post மனவெளிப் பயணம்.. சிங்கப் பெண்ணே நடையிடு! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Gayathri Mahathi ,
× RELATED டூர் கிளம்புறீங்களா?